கந்தபுராணம் பகுதி-15

முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு ! நான் யாரையும் அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. என்னை தனிப்பட்ட முறையில் திட்டுபவர்களைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் அடியார்களுக்கு ஒரு துன்பமென்றால், அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன். பத்மாசுரனின் சகோதரர்கள் அதைத் தான் செய்கிறார்கள். எனவே, அவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன். முதலில், இந்த தாராகசுரனை ஒழிக்க வேண்டும். யானை முகம் கொண்ட அவனையும், அவனது படையையும் சாதாரணமாக எடை போட்டு விடாதே. எப்போதுமே, எதிரிகள் நம்மை விட வலிமை வாய்ந்தவர்கள் என்பதை யாரொருவன் அலட்சியம் செய்கிறானோ, அவனை வெற்றிதேவி நெருங்கமாட்டாள். இதை நீ மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீ உடனே தாரகனின் கோட்டைக்குள் செல். நமது படைத்தலைவர்கள் ஐம்பத்து நான்கு பேரை உடனழைத்துச் செல். அவர்களது தலைமையில், நம்மோடு வந்த படையில் பாதி பேரை அணிவகுக்கச் செய். ஒட்டுமொத்த தலைமை பொறுப்பு உன்னைச் சேரும். துணைப் படைத்தலைவராக தம்பி வீரகேசரியை நியமித்து விடு. உம்…சற்று கூட தாமதிக்க வேண்டாம். நான் பின்னாலேயே கிளம்பி வருகிறேன், என்றார். வீரபாகு படைகளை கணப்பொழுதில் ஆயத்தப்படுத்தி, தாரகனின் கோட்டை நோக்கி புறப்பட்டான். இந்நேரத்தில், அசுரர்கள் வாழ்ந்த மகேந்திரபுரி பட்டினத்தில் அபசகுனங்கள் தோன்றின. கழுதைகள் கத்துவது போல மேகக்கூட்டங்கள் சப்தம் எழுப்பின. வானத்தில் இருந்து ரத்த மழை பெய்தது. நரிகள் காரணமின்றி ஊளையிட்டன. மேகம் சூழ்ந்ததால் சூரியனைக் காணவில்லை. அதிகாலை வேளையில் சூரியின் உதிக்காத நாள் ஒரு நாட்டுக்கு நல்லதைச் செய்யாது. மக்கள் துன்பப்படுவர். கடும் மழை காலத்தில் கூட சூரிய ஒளி அதிகாலைப் பொழுதில் தெரியாவிட்டால் ஆபத்து விளையும். அசுரர் வீட்டுப் பெண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து அலங்கரிக்கச் சென்ற போது, தங்கள் கணவன்மாரின் தலையற்ற உடல்கள் கண்ணாடியில் தெரிவது போல் கண்டு அலறினர்.நீர்நிலையில் வானவில் தெரிந்தது. இவையெல்லாம், தங்கள் நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரப்போகிறது என்பதை உணர்ந்தனர் அசுரர்கள். ஆனாலும், ஜென்மபுத்தி மாறுமா ? அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு பொடியாக்கி விட்டன வீரபாகுவின் படைகள். கோட்டைக்குள் முருகனின் படை நுழைந்து விட்டது யென்ற தகவல், தாரகனுக்கு பறந்தது. உடனடியாக அவன் போர் முரசறைந்தான். கையில் பல்வேறு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, தாரகனின் படைகள் தேவ படைகளுடன் மோதின. இருதரப்பிலும் பயங்கர சேதம். இருதரப்புமே சமநிலையில் தான் போரிட்டன. வீரபாகுவை ஒழித்துக் கட்ட தாரகனே நேரில் போர்களத்துக்கு வந்து விட்டான். அவனை துணைத்தளபதி வீரகேசரி எதிர்த்தான். இருவரும் அம்பு மழை பொழிந்தனர். தாரகன் விடுத்த அம்புகளை வீரகேசரி தன் அம்புகளால் அடித்து நொறுக்க, பதிலுக்கு வீரகேசரி விடுத்த அம்புகளை, தாரகன் தன் கதாயுதத்தால் அடித்து நொறுக்கி விட்டான். ஒரு கட்டத்தில், வீரகேசரி மீது அதிபயங்கர அம்புகளை ஏவினான். அவற்றை தடுக்க முடியாத கேசரி மயக்கமடைந்து கீழே விழுந்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட வீரபாகு, தாரகனின் முன்னால் வந்தான். தாரகா ! மரியாதையாக சரணடைந்து விடு. என் கண்ணில் பட்ட எதிரிகள் உயிர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என் காலில் விழு என எச்சரித்தான். தாரகன் நகைத்தான். ஏ பொடிப்பயலே ! உன் தலைவன் முருகனே எனக்கு தூசு. அப்படியிருக்க, நீயெல்லாம் ஒரு ஆளா! நீ அனுப்பிய உன் துணைப்படைத்தளபதி, என் அம்புகளின் தாக்கத்தால் மயங்கிக்கிடப்பதைப் பார்த்துமா, உனக்கு புத்தி வரவில்லை. உன்னை என் ஒரே அம்பில் மாய்த்து விடுவேன். சிறுவன் என்பதால் விடுகிறேன். ஓடி விடு என எச்சரித்தான்.வீரபாகு பயங்கரமாக சிரித்தான். அம்பு மழை பெய்யச் செய்தான். எதற்கும் கலங்காத தாரகன், தன் தும்பிக்கையாலேயே அத்தனையையும் நொறுக்கிவிட்டான். கோபத்தில் தன் கதாயுதத்தால், பூமியின் மீது ஓங்கி அடித்தான். அதன் பலம் தாங்காத பூமி, இரண்டாகப் பிளந்துவிட்டது.வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் வெப்பத்துக்கே உண்டு என்று அறிவியல் ரீதியாகச் சொல்வார்கள். இதை நமது ஆன்மிகம் என்றோ கண்டுபிடித்திருக்கிறது. தாரகன் வீரபாகு மீது ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை எய்தான். இந்த அம்பு எய்யப்பட்டால், அந்த இடம் தீப்பிடித்து நாசமாகி விடும். இப்போது குண்டு போட்டால், தீப்பிடிப்பது போலத்தான் இதுவும். பதிலுக்கு வீரபாகுவும் அதை விட சக்தி வாய்ந்த ஆக்னேய அஸ்திரத்தை எய்தான். தாரகன் விடுத்த அம்பால் எரிந்த தீயை, வீரபாகுவின் அம்பு உருவாக்கிய தீ அணைத்து விட்டது. திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்த பிறகும், கோபம் தணியாமல் நிற்க, சிவபெருமான் நரசிம்மத்தை விட அதிக கடுமை கொண்ட சரபேஸ்வர வடிவம் எடுத்து, நரசிம்மரின் கோபத்தை அடக்கியது போன்ற நிலைமை இங்கே இருந்தது. இப்படியாக வாருணம், ஸெளரம், நாராயணாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களால் இருவரும் போரிட்டனர். எதற்கும் பணியாத தாரகனை நோக்கி, தன்னிடமிருந்து கடைசி அஸ்திரமும், எப்பேர்ப்பட்ட இடத்தையும் பொடிப்பொடியாக்கும் வீரபத்திரம் என்ற அஸ்திரத்தை வீரபாகு எய்தான். நெருப்பு ஜூவாலையைக் கக்கிக் கொண்டு, அது தாரகனை நோக்கிப் பாய்ந்தது. அதன் உக்கிரத்தை தாரகனால் தாங்க முடியவில்லை.Continued Part 16 in Next Article.

References

Parasakthi KD (2012, June 08). Kandha Puranam in Tamil. Penmai. https://www.penmai.com/community/threads/kandha-puranam-in-tamil-pdf-download.83998/

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *