Part 19சூரபத்மனின் தூதர்கள் பல்வேறு உருவங்களில் முருகனைப் பற்றிய ரகசியங்களை அறியப் புறப்பட்ட வேளையில், முருகப்பெருமானும் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டார். அவர் பல சிவத்தலங்களை தரிசித்த பிறகு, செந்தூர் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு பெரிய கடல் இருந்தது. அங்கே தான் தங்குவதற்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்கினார். ஐந்து லிங்கங்களை அமைத்து தந்தையையும் வழிபட்டு வந்தார். சூரனை அழிப்பதற்குரிய வழிவகைகளை ஆய்வு செய்யவும், சூரனின் மகன் பானுகோபனால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் சூரனால் சிறையில் அடைக்கப்பட்ட தேவாதிதேவர்களையும் அழைத்து வர ஒரு தூதனை அனுப்ப ஏற்பாடு செய்தார். அந்தத் தூதன் வேறு யார் ? வீரபாகுதான். வீரபாகு ! நீ உடனே சூரன் தங்கியிருக்கும். செல். சூரனின் படை பலத்தை அறிந்து கொள். சூரனால் பிடித்துச் செல்லப்பட்ட ஜெயந்தன் மற்றும் தேவர்களை மீட்டுவிடு. பின்னர் சூரனிடம், எங்கள் தலைவர் முருகனிடம் சரணடைந்து விடு. இல்லாவிட்டால் தலையை இழப்பாய், என எச்சரித்து விட்டு வா, என்றார். வீரபாகுவுக்கு ஏக சந்தோஷம். அவனைப் போல் வீரனை இனி புராண சரித்திரம் காணாது. வைணவத்தில் ஒரு அனுமானைப் போல், சைவத்தில் வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில், அவரை மனதார வணங்கி, விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமான மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர். மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அந்த அசுரனின் படைத்தளபதி வீரசிங்கன், பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். டேய் ! நில், நீ யார் ? எங்கே போகிறாய் ? என்றான்.வீரபாகு சற்றும் கலங்காமல், நான் வெற்றிவடிவேலனின் வீரத்தளபதி வீரபாகு. நான் சூரபத்மனின் அரண்மனை நோக்கி வடிவேலனின் தூதுவனாக சென்று கொண்டிருக்கிறேன். நீ உன் வழியில் போ, என்றான். வீரபாகுவை அவன் தடுத்தான். எங்கள் அசுரகுல தலைவரைப் பார்க்க கேவலம் நீ செல்வதா ? உன்னை ஒழித்து விடுகிறேன், என் பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு, முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர். அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு, அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை வந்தடைந்தான். நகர எல்லைக்குள் நுழைந்த போது, நான்கு திசை வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதைப் பார்த்தான். இத்தனையையும் மீறி நகருக்குள் செல்லும் வழியை ஆலோசித்தான். அப்போது தெற்குவாசலைக் காவல் செய்த யானை முகம் கொண்ட கஜாமுகன் என்ற காவல்படை தலைவன் வீரபாகுவை பார்த்து விட்டான். ஏய் நீ யார் ? தேவர்களின் ஏவலாளி போல் தெரிகிறாயே ! பாதுகாப்பு மிக்க இந்த பட்டணத்துக்குள் எப்படி நுழைந்தாய் ? மாய வித்தைகளைக் கடைபிடித்து உள்ளே வந்தாயா ? என்று சொல்லிக் கொண்டே வீரபாகுவை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் அவன், ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி, வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டான். கோபம் தாளாத கஜாமுகன், ஆயிரம் மலைகளைப் பிடுங்கி அவன் மீது விசினான்.அதுவும் பலனளிக்கவில்லை. அவற்றைத் தூளாக்கிய வீரபாகு, வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து, கஜாமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜாமுகன் உயிரை இழந்தான். பின்னர் தனது உருவத்தை சுருக்கி நிஜஉருவம் எடுத்த வீரபாகு, ஒரு கோபுரத்தின் மீது ஏறி, மகேந்திரபுரியை நோட்டமிட்டான். மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நகரின் அழகு அவனைக் கவர்ந்தது. ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும், ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்படிருந்ததைப் பார்த்தான். இவர்கள் சூரபத்மனால் தண்டிக்கப்பட்டவர்கள். தனக்கு பணியாத தேவர்களின் கைகளையும், கால்களையும் வெட்டினான் சூரபத்மன். அவை உடனே முளைத்து விட்டன. தேவர்கள் ஏற்கனவே அமிர்தம் பருகியவர்கள் என்பதால், இத்தகைய நிலை ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட சூரன், அங்கிருந்த சிறையில் அவர்களை அடைத்து விட்டான். அதுபோல், தன்னை மணக்க சம்மதித்த தேவமாதர்களைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தான். அவ்வூரில் குவியும் குப்பையையும், தூசையும் வாயுபகவான் காற்று வீசி ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் துப்புரவு பணியைச் செய்து கொண்டிருந்தான். ஜெயந்தனும், தேவர்களும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற சில அசுரர்கள், உங்கள் தலைவன் இந்திரனும், இந்திராணியும் எங்கிருக்கிறார்கள் ? சொல்லாவிட்டால் சித்ரவதை செய்வோம், என்று கூறி அவர்களைச் சித்ரவதை செய்தனர். அவர்கள் சென்றதும் ஜெயந்தன் வேதனை தாளாமல், லோக நாயகரான சிவபெருமானே ! எங்களை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் ? எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா ? என் தாயும், தந்தையும் எங்கிருக்கிறார்களோ ? அவர்கள் என்னவெல்லாம் துன்பம் அனுபவிக்கிறார்களோ என்று புலம்பினான்.Continue Part 20 in Next Article
References
Parasakthi KD (2012, June 08). Kandha Puranam in Tamil. Penmai. https://www.penmai.com/community/threads/kandha-puranam-in-tamil-pdf-download.83998/