கந்தபுராணம் பகுதி-21

Part 21வீரபாகு சூரனின் மிரட்டலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சூரபத்மா ! மீண்டும் எச்சரிக்கிறேன் ஜெயந்தனை விடுதலை செய்கிறாயா ? அல்லது உன்னை நானே கொன்று போட்டு விடட்டுமா ? என்றான் ஆவேசமாக. சூரனை சுற்றி நின்ற அசுரர்களும் ஆவேசமானார்கள். வீரபாகுவை பிடிக்க அவர்கள் எத்தனித்தனர். பலமடங்கு கோபத்தில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த சூரபத்மன் ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் கொண்ட அசுரர்களை வீரபாகுவைப் பிடிக்க ஏவினான். வீரபாகு எழுந்தான். அவன் எழவும் ரத்தின சிம்மாசனம் தானாக மறைந்து விட்டது. வீரபாகு அரண்மனைக்கு வெளியே பாய்ந்து சென்று அதன் முகப்பில் இருந்த 20 ஆயிரம் கலசங்கள் பொருந்திய கோபுரத்தை பிடுங்கினான். அதை தூக்கி தன்னைத் தாக்க வந்த கொடிய அசுரர்கள் மீது வீசினான். அதன் அடியில் சிக்கி அவர்கள் மாண்டனர். பின்னர் அரண்மனைக்குள் வந்தான். சூரபத்மனின் ஆஸ்தான மண்டபத்தை தன் கையாலேயே இடித்து நொறுக்கி எக்காளமாய் சிரித்தான். சூரபத்மன் தன் மகன் வஜ்ரபாகுவை வரவழைத்தான். டேய் ! நீ அந்த பாதகனைக் கொல், என்றான். வஜ்ரபாகு பத்தாயிரம் குதிரை பூட்டிய தேரில் ஏறி வீரபாகு மீது எற்ற வந்தான். வீரபாகு தன் காலால் எட்டி உதைத்து தேரை நொறுக்கினான். பல மாளிகைகள் பிடுங்கி அவன் மீது வீசினான். ஆனால், சில பாணங்களின் தாக்குதல் தாங்காமல் அவ்வப்போது களைப்படையவும் செய்தான். பின்னர்,வஜ்ரபாகுவின் ஆயுதங்களை முழுமையாக அழித்து விட்டு, அவனைப் பிடித்து இழுத்தான். நெஞ்சில் ஓங்கி மிதித்தான். அலறியபடியே உயிர்விட்டான் வஜ்ரபாகு. அதன்பிறகும் கோபம் தணியாத வீரபாகு வீரமகேந்திர பட்டணத்தை சின்னாபின்னப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்று விட்டான். சூரபத்மனும் அவன் மனைவி பத்மகோமளையும் மகனின் பிரிவால் அழுதனர். அப்போது மந்திரி தாமகோபன் வந்தான்.மகாராஜா ! துன்பங்கள் மிஞ்சும் நேரத்தில் அழுது கொண்டிருப்பது எந்த தீர்வையும் தராது. நம் இளவரசரின் ஆயுள் அவ்வளவு தான் ! அவருக்கு நிர்ணயிக்கப்பட்டதை மாற்ற யாராலும் இயலாது. துன்பத்தை விடுங்கள். நடக்கப் போவதை இனி கவனிப்போம். தங்களால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திருச்செந்தூரில் இருந்து திரும்பி விட்டனர். அவர்கள் சொன்ன தகவலின்படி நாம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். அசுரகுலத்திற்கு கெட்ட நேரம் வந்திருக்கிறது. அதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்குரிய ஆலோசனைகளை உடனடியாகச் செய்தாக வேண்டும் மந்திராலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள், என்றான். திருச்செந்தூரில் இருந்து திரும்பிய ஒற்றர்களிடம் சூரபத்மன் அங்கு நடந்தது பற்றி விசாரித்தான். அவர்கள் சூரனிடம், மகாபிரபு ! இளவரசர் வஜ்ரபாகுவைக் கொன்ற வீரபாகு மின்னலென பாய்ந்து திருச்செந்தூர் வந்தான். அவனை முருகன் ஆலிங்கனம் செய்து கொண்டார். இங்கு நடந்த விபரங்களை விளக்கமாகச் சொன்னான். முக்கியமாக நம் இளவரசர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் தேவர்களெல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ஜெயந்தனையும், மற்றவர்களையும் நீங்கள் விடுதலை செய்ய மறுத்து விட்டதால், தங்களுடன் போரிடவும் அந்த முருகன் தயாராகி விட்டார். உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார், என்றனர். உடனே சூரன், அந்த பிரம்மாவைக் கூப்பிடு. வீரபாகுவால் சிதைக்கப்பட்ட நம் நகரத்தை முதலில் சரி செய்வோம். பின்னர் போருக்கு ஆயத்தமாவோம். என்றான். ஒற்றர்கள் தலை குனிந்தனர். பிரபு ! பிரம்மா இனி இங்கு வரமாட்டார். அவர் முருகன் இருக்கும் திருச்செந்தூரில் அவர் அருகிலேயே அமர்ந்து விட்டார். எனவே, நாம் மாற்று ஏற்பாடு தான் செய்ய வேண்டும், என்றனர். உடனே சூரன் மற்றொரு அண்டத்தின் பிரம்மாவை வரச்செய்து, அவரைக் கொண்டு நகரை மீண்டும் கட்டினான்.இதன்பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற பேச்சுவார்த்தை நடந்தது. வீரம்மிக்க பல அசுரர்கள் முன்வந்தனர். சூரபத்மனின் புதல்வர்களான இரண்யன், சிங்கமுகன் ஆகியோர் போருக்கு செல்ல முன்வந்தனர். காலஜித், கண்டன், அனவன், சிங்கன் ஆகிய படைத்தலைவர்கள் போருக்கு முன்வந்தனர். அடுத்து வீரத்திலகனான பானுகோபன் எழுந்தான். இவன் சூரபத்மனின் வீரத்திருமகன், தந்தையே ! என் சகோதரன் வஜ்ரபாகுவைக் கொன்ற கூட்டத்தை என் கையால் அழித்தால் தான் எனக்கு தூக்கமே வரும். அந்த முருகனைப் பந்தாடிவிட்டு வருகிறேன். உத்தரவு கொடுங்கள், என்றான் இப்படியாக முருகனுடன் போருக்குச் செல்ல, பலர் ஆர்வமாக முன்வர, சூரபத்மன் மகிழ்ச்சியடைந்திருந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கருத்தைச் சொன்னான் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன். அண்ணா ! நீங்கள் எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. படைத்தலைவர்கள் அவசரப்படுகிறார்களே ஒழிய சிந்திக்கவில்லை. உங்களில் யார் போருக்குச் சென்றாலும் உயிரிழப்பது உறுதி. யாரோ ஒரு வீரபாகு. அவன் முருகனுக்கு தூதுவன். ஒரு தூதுவனே நம் அருமை மைந்தன் வஜ்ரபாகுவைக் கொன்றிருக்கிறான் என்றால், அவனது தலைவனான முருகனின் ஆற்றலைக் கேட்கவும் வேண்டுமா ? வேண்டாம் அண்ணா ! நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த முருகனிடம் நாம் சரணடைந்து விடுவோம். தேவர்களை விடுதலை செய்து விடுவோம். பின்னர் நம் நாடு நகரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம். பராக்கிரமம் மிக்க அவனிடம் போரிட்டு நம் இனத்தையே அழிப்பதை விட இது நல்ல யோசனை தானே ! என்றான். இப்படி ஒரு ஆலோசனை தம்பி சிங்கமுகனிடம் இருந்து வருமென சூரபத்மன் எதிர்பார்க்கவில்லை. அசுர சபையும் முகம் சுளித்தது. சூரபத்மன் ஆவேசத்துடன், முட்டாளே ! உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ? என்று சீறினான்.Continue Part 22 in Next article

References

Parasakthi KD (2012, June 08). Kandha Puranam in Tamil. Penmai. https://www.penmai.com/community/threads/kandha-puranam-in-tamil-pdf-download.83998/

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *